Wednesday, August 6, 2014

திரு கிரிதரன் நவரத்தினம் அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் I : Discussion about Greet with V.N.Giritharan Editor in Chief Online Tamil Magazine since 2000

திரு கிரிதரன் நவரத்தினம் [V.N.Giritharan Editor in Chief Online Tamil Magazine since 2000] அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் I : 

கிரிதரன் நவரத்தினம் : பொதுவாகக் க், த், ட், ப், ற் போன்ற எழுத்துகளைத் தொடர்ந்து வரும் உகர எழுத்தைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராது. உதாரணமாக வாத்து / வாத்துகள், நாக்கு / நாக்குகள், கணக்கு / கணக்குகள் போன்றவற்றைக் கூறலாம். தோப்புகள் என்னும் சொல்லின் பன்மை: தோப்புகள். தோப்புக்கள் என்பது தோப்பிலிருந்து பெறப்பட்ட கள் என்னும் அர்த்தத்தைத் தரும். அந்த வகையில் வாழ்த்து என்னும் சொல்லின் பன்மையாக வாழ்த்துகள் என்பதே வரும். ஆயினும் இன்று பலர் வாழ்த்துக்கள் என்றே எழுதி வருகின்றனர். இதுவரை காலத்தில் எத்தனையோ சொற்கள் வழுக்களுடன் (பாவனையிலிருந்த காரணத்தால்) தமிழ் இலக்கணத்துள் உள்வாங்கப்பட்டு விட்டன. அதுபோல் வாழ்த்துக்கள் போன்ற சொற்களைப் பலர் அதிகமாகப் பாவிப்பதால் , தமிழ் இலக்கணத்துள் உள்வாங்கப்படும் சாத்தியங்களுள என்றே நினைக்கின்றேன்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : திரு Giritharan Navaratnam ,வாழ்த்துக்கு பன்மையில் கள்/க்கள் என்ற விகுதி ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் "வாழ்த்து" என்ற வினை/பெயர்/உரி சொல்லுக்கு பன்மை விகுதி வாரா என்று தானே நானுன், திரு செந்தில் நாராயணனும் ஆய்ந்து முடிவுக்கு வந்து உள்ளோம்.இது பற்றி உங்கள் நிலை என்ன ஐயா ?"வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று கொள்ளுதல் சரி தானே ஐயா ?

கிரிதரன் நவரத்தினம் : "வாழ்த்து" என்ற வினை/பெயர் உரிசொல்லுக்கு பன்மை விகுதி" என்று கூறுகின்றீர்கள். வாழ்த்து என்பதை ஏன் உரிச்சொல் என்னும் முடிவுக்கு வருகின்றீர்கள். உரிச்சொல்லின் வரைவிலக்கணத்தின்படி உரிச்சொல் பெயர், வினையடைகளாக வந்து , பண்பினை உணர்த்தும் , பெரிதும் செய்யுளுக்கு உரிய சொல் அல்லவா? ஆனால், வாழ்த்து என்பது பெயர் மற்றும் வினையடைகளாக வரும் அதே சமயம் வினைச்சொல்லாகவும் அல்லவா (வாழ்த்தினேன், வாழ்த்தினார் என்று) வருகின்றது. உரிச்சொல் வினைச்சொல்லாக வருவதாக அதன் இலக்கணம் கூறவில்லையே. மேலும் உரிச்சொற்கள் ஒரு குணம் தழுவிய, பல குணம் தழுவிய என இரு வகையான பிரிவுகளை உடையவை. அவ்வாறாயின் வாழ்த்து என்பதை எவ்விதம் இப்பிரிவுக்குள் அடக்கலாமென்று நினைக்கின்றீர்கள்? உதாரணமாக சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் மிகுதி என்னும் பண்பினைத்தரும் சொற்கள். இவ்விதம் வாழ்த்து என்பதை எவ்விதம் ஒப்பிடலாமென்று நினைக்கின்றீர்கள்?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : உரிச்சொல் வினைச்சொல்லாகாது எனினும், வினைச்சொல்லில் இருந்து தருவிக்கப்பட்ட வினையடை மற்றும் பெயரடை "வாழ்த்து" என்பது உரிச்சொல் தானே ? வினையடை மற்றும் பெயரடையாக வரும் சொல்லும் தானே உரிச்சொல் என்பது ? தாங்களும் "வாழ்த்துப்பா" என்னும்போது வாழ்த்து என்பது பெயரடையாக வருகிறது என்று அறிவுறுத்தி உள்ளிர்களே ! நானும் "திருவள்ளுவர் திருக்குறள் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழுத்து பாடினார்" என்ற வாக்கியத்தில் "வாழ்த்து: வினையடையாக தானே வருகின்றது என்று கூறி மெய்ப்பித்து உள்ளேனே ! "வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று கொள்ளுதல் சரி தானே ஐயா ?

கிரிதரன் நவரத்தினம் : ஒரு சொல் வினையடையாக அல்லது பெயரடையாக வருவதால் மட்டும் உரிச்சொல்லாவதில்லை. உரிச்சொல் என்பது பல்வேறு பண்புகளையும் உணர்த்தும் பெயர். அச்சொல் ஒரு பண்பினை உணர்த்தலாம். அல்லது அந்தச்சொல் பல பண்புகளை உணர்த்தலாம். இவ்விதமாக அச்சொல்லானது பெயர் மற்றும் வினைச்சொற்களோடு சேர்ந்து பண்பினை உணர்த்தினால்தான் அச்சொல் உரிச்சொல். மேலும் உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல். வாழ்த்து என்னும் சொல்லினைப் பார்த்தால் இச்சொல் உரிச்சொல்லுக்குரிய பண்பினைக் கொண்டிருக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். இச்சொல் ஒரு பண்பினை அல்லது பல பண்புகளை உணர்த்துகின்றதா என்று பார்க்க வேண்டும். செய்யுளுக்கு உரிய சொல்லாகவும் வருகின்றதா என்றும் பார்க்க வேண்டும். இவ்விதம் உரிச்சொல்லுக்கு உரிய சகல இலக்கணத்தகுதிகளையும் பார்க்கும்போது வாழ்த்து என்னும் சொல் உரிச்சொல்லுக்குரிய தகுதியினைப் பெறவில்லையென்றே நான் கருதுகின்றேன். இது என் கருத்து. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வினையடை,பெயரடை சொற்கள் உரிச்சொல் இல்லையா ? வினையடை,பெயரடை சொற்கள் உரிச்சொல் தானே ? வாழ்த்து என்ற சொல்லை நாம் இருவருமே வினையடை,பெயரடை சொல்லாக ஏற்கும் போது ,அவ் வினையடை,பெயரடை சொல் உரிச்சொல் இல்லையா ஐயா ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வாழ்த்துதல் என்பதும் மனித பண்பு தானே ஐயா ? வழுத்தல் ,பரவு,பழிச்சு ஆகிய சொற்கள் உரிசொலாக வந்து வாழ்த்து என்ற சொல்லை தானே குறிகின்றது ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : பெயருரிச்சொல் தானே பெயரடை என்றும் வினையுரிச்சொல் தானே வினையடையாகவும் கருதப்படுகின்றது ஐயா ? நான் தவறாக கருத்தில் கொண்டு உள்ளேனா ஐயா ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
நன்னூல்-உரியியல் 453:
"துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர்த் தொழில் குணம்"
நன்றி பவணந்தி முனிவர்
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை :
துய்த்தல் ........ உய்த்தல் = துய்த்தல் ,துஞ்சல் ,தொழுதல் ,அணிதல் ,உய்த்தல் என்னும் ஐந்தும் , ஆதி = இவை போல்வன பிறவும் , உடல் உயிர்த் தொழிற்குணம் = உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணங்களாம் .
அப்படி எனில் "வாழ்த்துதல்" என்ற சொல்லும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
நன்னூல்-உரியியல் : 459
முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை
விளக்கம் : இவ்விருபத்திரண்டும் இவைபோல்வன பிறவும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் வரும்
அப்படி எனில் "வாழ்த்துதல்" என்ற சொல்லும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் தானே ?

கிரிதரன் நவரத்தினம் : செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாழ்த்துகள் / வாழ்த்துக்கள் பற்றிக் குறிப்பிடும்போது "எனவே உரிச்சொல்லாக[வினையுரிச்சொல்] இருக்கும் "வாழ்த்து" என்ற சொல் பண்பினை குறிக்கும் போது அது "கள்" அல்லது "க்கள்" என்ற பன்மை விகுதி பெற்று வருமா எனற கேள்வியும் எழுகின்றது. வாழ்த்துகள் ,வாழ்த்துக்கள் இரண்டும் தவறு தானே ? .... வாழ்த்து என்ற வினைச்சொல் ,முதல்நிலைத் தொழிலாகுபெயராகி , வினையடை, பெயரைடை யாகவும் காட்சி அளிப்பதால்..... "வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று கொள்ளுதல் சரி தானே " என்று கேட்டிருக்கின்றார். இதற்கான பதிலை திரு. செந்தில் நாராயணன் மாதர் பற்றிக் கூறும் விளக்கத்தில் அறிந்துகொள்ள முடியும். அதிலவர் 'மாதர் என்னும் சொல் இயல்பான நிலையில் பெண்கள் என்னும் அர்த்தத்தைத் தரும்போது உரிச்சொல்லாகக் கருதப்படுவதில்லை' என்றும், 'காதல் என்னும் அர்த்தத்தில் செய்யுளில் வரும்போதுதான் உரிச்சொல்லாகக் கருதப்படும்' என்கின்றார். ஒரு சொல் உரிச்சொல்லாக வரும் போது அதற்குப் பன்மை வாரா. உதாரணமாக மாதர் என்பது காதல் என்னும் அர்த்தத்தில் வரும்போது பன்மை வராது. ஆனால் மாதர் என்பது தன் இயல்பான பொருளில் வரும்போது அதற்குப் பன்மை வரலாம். உதாரணமாக மாதர் (மாதர் என்பதை மாது என்னும் ஒருமையின் மரியாதைக்குரிய சொல்லாகவும் கருதலாம்; பன்மையாகவும் கருதலாம். அவர் என்பதைப் போல்) என்பதன் பன்மையாக மாதர்கள் என்னும் பதம் பல இடங்களில் பாவிக்கப்பட்டுள்ளது. திருவாய் மொழியில் 'மாதர்கள் வாண்முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்' என்று வருவதைக் காணலாம். இதுபோல் வாழ்த்து என்பதைத் திரு செந்தில்குமரன் கருத்துப்படி உரிச்சொல்லாகக் கொண்டால் அதற்குப் பன்மை வராது. ஆனால் அதன் இயல்பான நிலையில் அது வாழ்த்து என்னும் பெயர்ச்சொல்லாகவும் வருகிறது. (கடவுள் வாழ்த்து, திருமண வாழ்த்து போன்றவற்றில்) அப்போது வாழ்த்துகள் என்று (மாதர்கள் என்று பயன்படுத்துவதுபோல்) பயன்படுத்தலாம்.
என்னைப்பொறுத்தவரையில் வாழ்த்து என்னும் சொல் உரிச்சொல்லாக வர வேண்டுமானால் இதற்குக் கடி என்னும் சொல்லுக்குள்ளதைப் போல் பல பண்புகளைக் குறிக்கும் கருத்துகள் அல்லது மிகுதி என்பதற்குப் பல உரிச்சொற்கள் வருவதைப்போல் வாழ்த்து என்னும் சொல்லும் பண்புணர்த்தும் சொல்லாக, செய்யுளுக்குரியதாக வரவேண்டும். வாழ்த்துவது மனிதரின் பண்பு. ஆனால் வாழ்த்து என்ற சொல் எந்தச் சொல்லின் பண்பினை உணர்த்தப் பாவிக்கப்படுகின்றது (ஏனைய உரிச்சொற்களைப் போல்). உரிச்சொல் என்றால்
"பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்" என்றிருக்க வேண்டும். செய்யுட்கு உரியன என்று வருவதைக் கவனிக்கவும். வாழ்த்து அவ்விதம் வருவதில்லை. அதன் இயல்பான அர்த்தத்திலேயே எப்பொழுதுமுள்ளது. மாதர் காதலைக் குறிப்பிடும்போது உரிச்சொல்லாக வருவதைப்போல், வாழ்த்து என்பது வேறென்ன அர்த்தத்தில் வருமென்று செந்தில்குமரன் கருதுகின்றீர்கள்?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா, நான் முன்பு நன்நூலை மேற்கோள் காட்டி கூறும் விடயங்கள் யாதுஎனில் ....................,
[1]நன்நூல் 453:
"துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர்த் தொழில் குணம்"
விளக்கம் :
துய்த்தல் ........ உய்த்தல் = துய்த்தல் ,துஞ்சல் ,தொழுதல் ,அணிதல் ,உய்த்தல் என்னும் ஐந்தும் , ஆதி = இவை போல்வன பிறவும் , உடல் உயிர்த் தொழிற்குணம் = உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணங்களாம் .
அப்படி எனில் "வாழ்த்துதல்" என்ற சொல்லும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ?
[2]நன்னூல் : 459
முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை
விளக்கம் : இவ்விருபத்திரண்டும் இவைபோல்வன பிறவும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் வரும்
அப்படி எனில் "வாழ்த்துதல்" என்ற சொல்லும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் தானே ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : "மாதர்" என்ற சொல் காதலை குறித்து உரிச்சொல்லாக நின்றாலும் ,இயல்பான பொருளில் பெண்களை குறித்து பெயர்ச்சொல்லாக நின்றாலும் அது வெவ்வேறு தேவைக்காக[ அர்த்தத்தில்] [காதல் என்று உரியாக, பெண்கள் என்று பெயராக] வருகிறது அல்லவா ? ஆனால் வாழ்த்து என்ற சொல் ஒரே நோக்கத்தில் தானே வினையாக,பெயராக, உரியாக பயன் படுகின்றது ? மேலும் நன்நூல் இலக்கணம் கூறுவது படி வாழ்த்து என்ற சொல்லும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ?[நன்நூல் 453] மேலும் நன்நூல் இலக்கணம் கூறுவது படி வாழ்த்து என்ற சொல்லும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் தானே ? [நன்நூல் 459]
செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நீங்கள் ஒரு விடயத்தை காண தவறுகின்றீர்கள். வாழ்த்து என்ற சொல் வினையாகவும், பெயராகவும் வந்து நன்நூல் கூறுவது படி உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணத்தை தானே பெற்று வருகின்றது ?மேலும் நன்நூல் கூறுவது படி அச்சொல் ஒலித்தற் தொழிற்பண்பினையும் அல்லவா பெற்று வருகின்றது? ஆனால் திருவாய் மொழியில் 'மாதர்கள்' என்ற பயன்பாடு பெயர்சொல்லாகதானே பயன்படுகின்றது ? பன்மை இங்கு தகுமே ! ஆனால் வாழ்த்து என்ற வினையீலும் , வாழ்த்து என்ற உரியீலும் பன்மை தகாத போது வாழ்த்து என்ற பெயரில் மட்டும் பன்மை தகுமோ ? மேலும் ஒருவர் உங்களுக்கு கூறும் "வாழ்த்து" என்பது எண்ணுவதற்கு [is it countable ?]ஏற்றதா ? இல்லையே ? அப்படி எனில் வாழ்த்துக்கள்[கள்] தவறு தானே ? முறுக்குகள் எண்ணபடலாம் . வாழ்த்துகளை எண்ண முடியுமா ஐயா ? ஒருவர் கூறும் "என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்ற வாக்கியத்தில் அவ் வாழ்த்துக்களை எண்ண முடியுமா ஐயா ? ஒருவர் ஒரு வாழ்த்து [வாழ்த்து செய்தி அல்லது வாழ்த்துரை] தானே என் பிறந்த நாளுக்கு கூற முடியும் ?

கிரிதரன் நவரத்தினம் : வாழ்த்து என்னும் சொல் ஒரே நோக்கத்தில், கருத்திலேயே எல்லா இடங்களிலும் வருவதால் அதனை உரிச்சொல்லாகக் கருதமுடியாதென்பதென் கருத்துகளிலொன்று. உரிச்சொற்களெல்லாம் செய்யுளில் இயல்பான பொருளற்ற இன்னுமொரு பொருளில் வருவதுதான் வழக்கம். அந்த வகையில் வாழ்த்து என்பது அவ்விதமான செய்யுளுக்கு மட்டுமுரிய சொல் அல்ல. துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல் போல் வாழ்த்துதலைக் கருதமுடியாதென நினைக்கின்றேன். வாழ்த்துதல் என்பது மொழியைப் பாவித்து, எழுத்தைப் பாவித்து, சித்திரங்களைப் பாவித்து எல்லாம் உடலைப் பாவிக்காமல் கூட வாழ்த்தலாம் அல்லவா. ஆனால் துய்த்தல், துஞ்சுதல், தொழுதல், அணிதல் எல்லாம் உடலைப் பாவித்துச் செய்யப்பட வேண்டியவை. வாழ்த்துதல் மனிதரின் நாகரிகப் பண்பு. உடலின் பண்புகளிலொன்றல்ல. பண்புக்குப் பல அர்த்தங்களுள்ளன. பண்பாக நடந்து கொண்டான் என்பதற்கும் , ஒரு பொருளின் பண்பு என்பதற்கும் வேறுபாடுகளுள்ளன.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா ,
[1] தெய்வத்தை தொழும்போது கடவுளை வாழ்த்தி மனம் ஒருமித்து பாடுதல் தகுமே ! எனவே தொழுதல் போன்றே வாழ்த்து என்ற சொல்லும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ? இஸ்லாமியர்கள் குரான் கொண்டு கடவுளை வாழ்த்தி தொழுவதும் , பிற மதத்தவர் தம் மறை நூல் கொண்டு கடவுளை வாழ்த்தி தொழுவதும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ?
[2]முழக்கு,அழுங்கு..... இவ்விருபத்திரண்டும் இவைபோல்வன பிறவும் ஒலித்தற்றொழிற்பண்பினைக்கொண்டு வினை ,பெயர் ,உரி சொற்க்களாக நின்று ஆனால் பன்மையில் வராத போது வாழ்த்து என்ற வினை ,பெயர் ,உரி சொல்லிலும் எப்படி ஐயா பன்மை வரும் ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா ,
தொழுதல் என்ற உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குண உரிச்சொல்லும் ,முழக்கு என்ற ஒலித்தற்றொழிற்பண்புச்சொல்லும் நன்னூல் இலக்கணபடி [453 மற்றும் 459] உரிச்சொல்லாக நின்றாலும் பயன்பாட்டில் வினையாகவும் வந்து தொழுதல் ,முழக்குதல் என்ற வினையினை குறிக்கும் போதும், இடியின் "முழக்கொடு" (குற்றாலக் குறவஞ்சி) என்றும், தொழுகை[ தொழுகைக்கான நேரம் 12 மணி]என்றும் பெயரினை குறிக்கும் போதும் அது பன்மையில் வாரா என்ற நிலையில் அது போன்ற "வாழ்த்து" என்ற உரிச்சொல்லும் பெயர்ச்சொல்லாக பயன்படும்போது பன்மையில் வராது என்பது நாம் நம் அறிவு மூலம் அடைய வேண்டிய முடிவு அல்லவா ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா ,
“பறை” [சொல்]எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாகவும் நிலைத்துவிட்டது. அதனை நன்னூல் இலக்கணம் 459 ,மற்றும் 458 விதிபடி உரிச்சொல்லாகவும் பயன்படுத்த முடியும். அது சமயம் “பறை” என்ற பெயர்ச்சொல்லுக்கு பன்மை விகுதி தகும் [பறைகள்]. இங்கு பன்மை வர காரணம் யாது எனில் பறை என்ற பெயர்ச்சொல் "உயிர் அல்" பொருளை சுட்டுவதால் அச் சொல் பன்மை பெறுவது இயல்பு தானே ? அதே சமயம் வாழ்த்து எனற சொல் பெயர் சொல்லாக பயன் படுத்த படும் போது அது "உயிர் பொருள் குணம் பண்பை" [உடல் உயிர்த் தொழில் குணம்] குறிப்பதால் அது பன்மை பெற்று வராது என்ற கருத்தை நான் நம் அறிவு கொண்டு பெறமுடியும் அல்லவா ?
குறிப்பு :
நன்னூல் இலக்கணம் 459 :
முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை
விளக்கம் : இவ்விருபத்திரண்டும் இவைபோல்வன பிறவும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் வரும்

நன்னூல் இலக்கணம் 458 :
மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை
கூற்றுப் புகறல் மொழிகிளவி "----விளம்பு அறை----"
பாட்டுப் பகர்ச்சி இயம்பல் சொல்லே

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா ,
இறுதியாக ஆனால் உறுதியாக நான் கூற விரும்புவது யாது எனில் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல கால வகையின் ஆனே" [நன்னூல் இலக்கணம் 462] என்ற விதிப்படி நாம் வாழ்வை அமைத்துகொண்டாலும், நான் மதித்து போற்றும் எம் இரு தமிழ் அறிஞர்கள் திரு நன்னன்[வாழ்த்துகள்] மற்றும் திரு பெருமாள்முருகன்[வாழ்த்துக்கள்] என்று கூறி தம் இலக்கண கண்னை திறந்து தவறு இழைக்கும் போது எம்மால் அமைதிகாக்க எம் தமிழ் என்னை அனுமதிக்கவில்லை.


விவாதம்தொடரும்.......


அன்புடன்,
கி.செந்தில்குமரன்