Saturday, January 25, 2014

ஜெயமோகனின் வெள்ளையானை : Jayamohan white Elephant critics



ஜெயமோகனின் வெள்ளை யானை படித்தேன். நாவலின் மிகப் பெரிய பலவீனம், ஒரு கதாபாத்திரம்கூட எதையும் நிகழ்த்த மாட்டேனென்கிறது. எல்லாக் கதாபாத்திரங்களும் எது நடந்தாலும் ஜெயமோகனின் பிரதிக் குரலாக எதையாவது தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கின்றன அல்லது நினைத்து நினைத்து உருகிக்கொண்டேயிருக்கின்றன. இந்தப் பேச்சுக்களை மட்டுமே முன்வைத்து அவர்களை அத்தகைய குணாம்சமோ மகத்துவமோ திறமையோ மனிதாபிமானமோ குரூரமோ இருப்பவர்களாகக் கற்பனை செய்துகொள்ள ஆசிரியர் நம்மை நிர்பந்தித்துக்கொண்டேயிருக்கிறார். ஒரு மகத்தான நாவலோ தன் பரப்பில் சம்பவங்களை நிகழ்த்துவதன் மூலமாகவே தன் மகத்துவத்தைச் சாத்தியப்படுத்திக்கொள்கிறது. வாக்கியங்களின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட அனுமதித்துக்கொள்ளாமல் சற்று நிதானித்துப் பார்த்தால் நாவல் முழுவதிலும் மானுட துக்கம், மானுட உச்சம், மானுட எக்ஸ், மானுட ஒய் அல்லது மகத்துவம் அல்லது ஒளிப் பாய்ச்சல் அல்லது இவற்றுக்கிணையான, எப்போதும் உச்சாணிக் கொப்பிலேயே தொற்றிக்கொண்டிருக்கும் வார்த்தைக் கோர்ப்புகளாலேயே நிறைந்திருப்பதையும் இவையனைத்தும் வெறும் சொற்களாயும் நினைவோட்டங்களாயுமே இருப்பதையும் வாசகரால் அவதானிக்க முடியும். பெரும் சலிப்பை ஏற்படுத்தும் எழுத்து (உத்தி?). ஒரு தலித் எழுச்சி உருவாவதும் அது எழுந்த வேகத்தில் அடங்கிப்போவதுமான கதை சார்ந்த நிகழாமையைப்பற்றி நான் சொல்லவில்லை. நான் கதையைப்பற்றிப் பேசவேயில்லை. கதாபாத்திரங்கள் எதுவுமே அபிப்பிராயங்களாகவன்றி ரத்தமும் சதையுமான பிரதித் தன்மையைப் பெறவேயில்லையென்பதுதான் என் வருத்தம். நாவலின் ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும் கதாபாத்திரங்கள் வாயிலாக ஜெயமோகன் பச்சையாகவே ஆஹா, இதை எப்படிச் சொல்லியிருக்கிறேன் பார்த்தாயா என்று கூடக்கூட வந்து புலம்பிக்கொண்டேயிருக்கிறார். வெறும் மானுட உச்சமான கற்பனைகள் மற்றும் எண்ணவோட்டங்களாலேயே (உண்மையில் சவடால்களாலேயே என்றுதான் சொல்ல வேண்டும்) ஒரு நபர் வரலாற்றில் (அல்லது ஒரு வரலாற்றுப் புதினத்தில்) தனக்குரிய புகழையோ கருணையையோ மன்னிப்பையோ (ஏய்டனை வாசகர்களின் இரக்கத்திற்குள்ளாக்குவதைப்போல) பெற்றுவிட முடியுமானால் அதற்கு மிகப் பெரிய முயற்சியோ நானூற்றுச் சொச்சப் பக்க படைப்போ தேவையில்லையென்றே தோன்றுகிறது. அட ஏய்டன் ஒரு கவிஞன் என்றும் மரீசா ஒரு நல்ல வாசகியென்றும் சொல்லும் ஆசிரியருக்குப் பிரதியில் அதை நிகழ்த்துவதற்குக்கூடவா கற்பனையில்லாமல் போய்விட்டது?! என்ன கவிதையை அவன் எழுதி அதில் அப்படியென்னதான் அந்த அறிவுஜீவிப் பாலியல் தொழிலாளி கண்டுவிட்டாள்? நாவல் முழுக்கப் பேச்சு பேச்சு பேச்சு. இந்த நாவலை ஒரு முதல் வரலாற்று நாவல் என்று புகழுமளவிற்குத் தமிழின் தீவிர வாசகர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களேகூட எத்தனை எளிமையான வாசகர்களாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை சுலபமாக அவர்களைத் திருப்திப்படுத்திவிட முடிகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் என்கிற வார்த்தையொன்றே ஒரு பிரதியை வரலாற்று நிகழ்வாக அங்கீகரித்துக்கொள்ள அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் உண்மையில் ஜெயமோகனைப் போன்ற ஒரு அற்புதமான படைப்பாளியிடம்இது போதாதுஎன்று சொல்லும் வாசகர்கள் போய்ச் சேரவில்லையென்றால் அது இப்படி அவர் வாசகர்களையும் ஏமாற்றித் தன்னையும் ஏமாற்றிக்கொள்வதில்தான் போய் முடியும்.


by
Ba Venkatesan
https://www.facebook.com/ba.venkatesan/posts/10201747359434138

No comments: